திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.122 திருஓமம்புலியூர்
பண் - புறநீர்மை
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம்
    புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர்
    விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச்
    செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யதுவே.
1
சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத்
    தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானார் இமையவ ரேத்த
    இனிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி அழலுமிழ் புகையின்
    ஆகுதி யால்மழை பொழியும்
உம்பர்க ளேத்தும் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யதுவே.
2
பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப்
    படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த
    தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த
    அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யதுவே.
3
புற்றர வணிந்து நீறுமெய் பூசிப்
    பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும்
    பிரானவன் உறைவிடம் வினவிற்
கற்றநால் வேதம் அங்கமோ ராறுங்
    கருத்தினார் அருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யதுவே.
4
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர்
    துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுரர் ஆசற வாழி
    யளித்தவன் உறைவிடம் வினவிற்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்
    தன்மையார் நன்மையால் மிக்க
உலப்பில்பல் புகழார் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யதுவே.
5
மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும்
    மலியுமா றங்கம் ஐவேள்வி
இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு
    பிறப்பென வொருமையா லுணருங்
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம்
    மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யதுவே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி
    தானுடை அரக்க னொண்கயிலை
அலைவது செய்த அவன்றிறல் கெடுத்த
    ஆதியார் உறைவிடம் வினவில்
மலையென வோங்கும் மாளிகை நிலவும்
    மாமதில் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழார் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யதுவே.
8
கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ
    னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவர் உமையவ ளோடும்
    உகந்தினி துறைவிடம் வினவிற்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனி
    பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யதுவே.
9
தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர்
    தடுக்கொடு சீவரம் உடுக்குங்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக்
    கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து
    நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யதுவே.
10
விளைதரு வயலுள் வெயில்செறி பவளம்
    மேதிகள் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கும் ஓமமாம் புலியூர்
    உடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக்
    காழியுள் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்கள்
    அமரலோ கத்திருப் பாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com